Search This Blog

Friday, August 24, 2007

பேராசிரியர் கி.நாச்சிமுத்து அவர்களுடன் நேர்காணல்

தமிழின் இரண்டாம் தலைநகரம்

பேராசிரியர் கி.நாச்சிமுத்து




சமீபத்தில் தில்லி நேரு பல்கலைக் கழகத்தின் இந்திய மொழிகள் மையத்தில் தமிழ்த் துறைத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள பேராசிரியர் கி.நாச்சிமுத்து, கேரளப் பல்கலைக் கழகத்தில் தமிழ்த் துறைப் பேராசிரியராகப் பல ஆண்டுகள் பணியாற்றியவர். தமிழின் குறிப்பிடத் தகுந்த மொழியலாளர்களில் ஒருவர். ஜெர்மனியிலும் தமிழகத்தில் க்ரியாவின் தற்காலத் தமிழகராதித் தொகுப்பிலும் பங்கேற்ற பல மொழி இலக்கியங்களிலும் பரிச்சயமுள்ளவர். பேராசிரியர் நாச்சிமுத்துவுடன் ஒரு மனம் திறந்த நேர்காணல்.

நீங்கள் சமீபத்தில் பேராசிரியராகப் பொறுப்பேற்றுள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் இந்திய மொழிகளின் மையம் மற்றும் அதன் செயல்பாடுகள் பற்றி...

இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது இந்தப் பல்கலைக் கழகம் துவங்கப்பட்டது. இந்தியத் தூதராகப் பல நாடுகளில் பணியாற்றிய பார்த்தசாரதி அவர்கள் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தர். மானிடவியல் துறையின் பல்வேறு பரிமாணங்கள் - உலக மொழிகள், அரசியல், சட்டம், சமூகவியல், வரலாறு போன்ற துறைகளோடு துவங்கப்பட்ட ஒரு பல்கலைக்கழகம் இது. இங்கு முதலில் அயல்நாட்டு மொழிகளைத் தான் பயிற்றுவித்து வந்தார்கள். பிறகு இந்திய மொழிகளை அறிமுகப்படுத்தினார்கள். இந்தப் பல்கலைக் கழகத்தில் வழக்கமான மற்ற பல்கலைக்கழகங்களைப் போன்ற துறைகள் இல்லை. பள்ளிகள் என்று தோற்றுவித்து நிர்வகித்து வருகிறார்கள். பல்வேறு துறைகளை ஊடுருவி ஒரு பரந்த பார்வையைக் கொண்டுவரக்கூடிய ஒரு அமைப்பாக இந்தப் பள்ளிகள் விளங்குகின்றன. இந்தப் பள்ளிகளுக்குக் கீழே பல்வேறு மையங்கள் செயல்படுகின்றன. இந்தப் பல்வேறு மையங்கள் கூட்டாகச் சேர்ந்து ஒரு பன்முகத்தன்மை கொண்ட செயல்திட்டங்களை செயல்படுத்தும் காரியத்தை செய்து வருகின்றன. இதில் இந்திய மொழிகள் மையம் என்று ஒரு அமைப்பு இருக்கிறது. அதில் இந்தியும் உருதுவும்தான் கற்பிக்கப்பட்டு வந்தன. இந்த மொழிகளில் மொழிபெயர்ப்புப் பணிகள் நடைபெற்று வந்தன.நீண்ட கால முயற்சிக்குப் பிறகு இந்த ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழை ஒரு பாடமாகக் கொண்டு வரவேண்டும் என்று தமிழக அரசும் முயற்சிகள் எடுத்தது. தமிழக அரசு கொடுத்த ஐம்பது லட்சம் உதவித் தொகையைக் கொண்டு ஒரு விரிவுரையாளர் பதவியைத் தான் உருவாக்க முடியும் என்று பல்கலைக்கழகம் கருதி இங்குள்ள தமிழறிஞர்கள், பேராசிரியர்கள், தமிழக அரசு ஆகியோரிடம் ஆலோசனைக் கேட்டு, தமிழை செம்மொழியாக அறிவித்தபோது தமிழுக்காக ஒரு பேராசிரியர் பதவியை ஏற்படுத்தினார்கள். ரோமிலா தாப்பர் போன்ற மிகப்பெரும் மேதைகள் இருந்த இடம் இந்தப் பல்கலைக் கழகம். எனவே, இங்கு தமிழ்ப் பேராசியர் பதவிக்கான அழைப்பு வந்தபோது நான் மகிழ்ச்சியுடன் பணியாற்ற வந்தேன்.

இதற்கு முன்னர் கேரளாவில் நீங்கள் வகித்த பொறுப்புக்கள்...

தமிழ்நாட்டில் கோவையில் பி.எஸ்.ஜி. கலைக் கல்லூரியில் புகுமுக வகுப்பு முடித்து அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இளங்கலையும் பிறகு கேரளப் பல்கலைக் கழகத்தில் முதுகலையும் பின்னர் முனைவர் பட்டத்துக்கான ஆய்வு, விரிவுரையாளர், இணைப்பேராசிரியர் போன்ற பதவிகளையும் அதே கேரளப் பல்கலைக்கழகத்தில் வகித்தேன். பின்னர் இரண்டாண்டுகள் ஜெர்மனியிலும் போலந்து வார்ஸா பல்கலைக்கழகத்தில் மூன்றரையாண்டுகள் வருகைதரு பேராசிரியராகவும் பணிபுரிந்தேன். எனவே கிட்டத்தட்ட நாற்பதாண்டுகள் நான் கழித்த கேரளப் பல்கலைக் கழகம்தான் எனக்குத் தாய்வீடாக ஆனது என்று சொல்ல வேண்டும். அங்கு நான் கடந்த பத்தாண்டுகளாக தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றினேன்.

நீங்கள் மேற்கொண்ட ஆய்வு எதைப்பற்றி இருந்தது?

முனைவர் பட்டத்துக்கான என்னுடைய ஆய்வு இடப்பெயர்கள் பற்றியது. முதுகலையிலும் நான் கொங்கு நாட்டு ஊர்ப்பெயர்கள் பற்றி ஆய்வு செய்தேன். அதைத் தொடர்ந்து இடப்பெயர் கழகம் என்ற அமைப்பினைத் தோற்றுவித்து நிறைய ஆய்வுக்கட்டுரைகளையும் செய்தி மடல்களையும் வெளியிட்டோ ம். கருத்தரங்குகளை ஏற்பாடு செய்தோம். அதன் பிறகு என்னுடைய ஆய்வுகள் பெரும்பாலும் தொல்லிலக்கணம், தொல் இலக்கியம் போன்றவற்றை நோக்கிச் சென்றது. பெரும்பாலும் மொழி, இலக்கியம் போன்றவற்றில் நான் அதிக ஈடுபாடு வைத்திருக்கிறேன். கல்வெட்டுக்கள், வரலாறு போன்றவற்றிலும் சுவடிகளைப் பதிப்பிப்பது, கல்வெட்டுக்கள் பற்றிய குறிப்புக்களை வெளியிடுவது போன்ற செயல்பாடுகளிலும் ஈடுபட்டதுண்டு. அகராதி இயலிலும் எனக்கு ஈடுபாடு உண்டு. முதலில் படைப்பிலக்கியத்தில் ஈடுபட்டிருந்தேன். ""நடை'' போன்ற இதழ்களில் கவிதைகளை வெளியிட்டேன். ""தாமரை இதழ்களிலும்'' ""கணையாழியிலும்'' கதைகள் எழுதியிருக்கிறேன். என்னுடைய நண்பர் நண்பர் என்று சொல்வதை விட என் வழிகாட்டி என்று சொல்லலாம். அவர் சொன்னார் - ""படைப்பிலக்கியங்களில் அதிகம் ஈடுபட்டால் ஆராய்ச்சிகளில் அதிகம் கவனம் செலுத்த முடியாது'' என்று. எனவே படைப்பிலக்கியத்தை விட்டு மேற்கூறிய துறைகளில் ஆய்வுப்பணிகளை மேற்கொண்டேன்.

தமிழ் தவிர உங்களுக்கு மலையாளம், சமஸ்கிருதம், இந்தி, ஜெர்மன், போலிஷ் போன்ற மொழிகளிலும் பரிச்சயம் உண்டு. இந்த மொழிகளில் மொழிபெயர்ப்புப் பணிகள் மேற்கொண்டிருக்கிறீர்களா?

மலையாளத்திலிருந்து நிறைய மொழிபெயர்ப்புக்கள் செய்திருக்கிறேன். மலையாளத்தில் கட்டுரைகளையும் எழுதியிருக்கிறேன். குறிப்பாக மலையாள எழுத்தாளர் சி.ராதாகிருஷ்ணனின் ஸ்பந்தமாதினிகளே நன்னி என்னும் சுமார் 600 பக்கங்கள் கொண்ட நாவலை நில அதிர்வுமானிகளே நன்றி என்று தமிழில் மொழி பெயர்த்திருக்கிறேன். நீலபத்மநாபன், சுகுமாரன் போன்றோர் இந்த மொழிபெயர்ப்பை மிகவும் சிலாகித்துப் பேசியிருக்கிறார்கள். நாராயணகுருவின் படைப்புக்களை மொழிபெயர்த்து இருக்கிறேன். போலிஷ் மொழியில் இருந்து 1996ல் நோபல் பரிசு பெற்ற விஸ்வாவா சிம்போர்ஸ்கா என்ற பெண் கவிஞரின் கவிதைகளை மொழிபெயர்த்து இருக்கிறேன். அங்கு டாக்டர் ஹெர்மன் என்று ஒரு தமிழ்ப்பேராசிரியர் ஒருவர் இருந்தார். அவருடைய துணையைக் கொண்டு போலிஷ் மொழியில் இருந்து நேரிடையாக மொழிபெயர்ப்பை மேற்கொண்டேன். ஓராண்டு ஜெர்மன் படித்தேன். திருவனந்தபுரத்தில் பல ஆண்டுகள் வசித்து இருக்கிறீர்கள்.

அங்கு மேற்கொள்ளப்படும் தமிழ்க் கலை, இலக்கிய செயல்பாடுகள் குறித்துக் கொஞ்சம் சொல்லமுடியுமா?

திருவனந்தபுரத்தை இரண்டாவது தமிழ்த் தலைநகரம் என்று சொல்லலாம். அது தமிழகத்துடன் மிகவும் நெருக்கமாக அமைந்துள்ள இடம். அங்கு 45 சதவிகிதத்துக்கும் மேல் தமிழர்கள் தான் வசிக்கிறார்கள். திருவனந்தபுரம், திருவாங்கூர் சமஸ்தானத்தின் தலைநகரமாக இருந்தது. ஒருவகையில் சொல்லப்போனால் அது தமிழர்களுக்குச் சொந்தமான இடம். சுந்தரம்பிள்ளை, அவருக்கு முன்னமே வரகவி ராமன் பிள்ளை (திருக்குறுங்குடி நம்பி பேரில் சதகம்) இருந்திருக்கிறார். சுந்தரம்பிள்ளை மகாராஜாவின் அன்புக்குப் பாத்திரமாக விளங்கியவர். 19ம் நூற்றாண்டின் இறுதியில் சுந்தரம்பிள்ளை திருவனந்தபுரத்தில் சைவப்பிரகாச சபையைத் தோற்றுவித்தார். சைவத்தையும் தமிழையும் வளர்ப்பதற்கென்றே தோற்று விக்கப்பட்ட சபை அது. வையாபுரிப்பிள்ளை, இசைச்செல்வர் லட்சுமண பிள்ளை கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை போன்ற சிறந்த தமிழறிஞர்கள் எல்லாம் அங்கு இருந்திருக்கிறார்கள். பாரதியார் கூட ஒருமுறை இந்த சைவப்பிரகாச சபைக்கு வந்திருக்கிறார். அப்போது அவருக்கு வெறும் சர்பத் மட்டும் கொடுத்து அனுப்பி விட்டார்கள். அடுத்த நாள் கூட்டத்தை வைத்துக்கொள்ளலாமா என்று வையாபுரிப்பிள்ளை கேட்கிறார். ஆனால் மற்றவர்களோ, அவர் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரானவர் என்றும் இவரை அழைத்துக் கூட்டம் போட்டால் அரசின் விரோதத்தை சம்பாதிக்க வேண்டியிருக்கும் என்று சொல்லி மறுத்துவிட்டார்கள் என்று வையாபுரிப்பிள்ளை ஓரிடத்தில் வருத்தத்துடன் பதிவு செய்திருப்பார். பாரதி தன்னுடைய ஊழிக்கூத்தை அங்கு பாடிக் காட்டினார் . இங்கிருந்து தமிழன் என்றொரு இதழ் வெளிவந்தது. தொடர்ச்சியாகப் பல தமிழ் நாடகங்களை அரங்கேற்றி இருக்கிறார்கள். நாராயணகுரு, சட்டம்பி சுவாமிகள் போன்றோருக்குக் குருவாக தைக்காடு அய்யாவு சுவாமிகள் என்றொரு தமிழர் இருந்திருக்கிறார். அவர் மிகப்பெரிய ஞானி. தீர்க்கதரிசி. மறைமலை அடிகள், சுவாமிநாத தீட்சிதர் போன்றவர்கள் எல்லாம் அங்கிருந்து தமிழ் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். ரட்சணிய யாத்ரீகம் எழுதிய ஹெச்.ஏ.கிருஷ்ணபிள்ளை. - இவரைக் கிறிஸ்துவர்களின் கம்பர் என்று சொல்வார்கள். அவரும் இருந்திருக்கிறார். ஆதிகாலத்திலிருந்தே திருவனந்தபுரத்தில் அதிகமாகத் தமிழ் நாடகங்கள் தான் நடைபெற்றுக்கொண்டிருந்தனவாம். பார்ஸி நாடகங்கள் எல்லாம் தமிழில் நிகழ்த்தப்பட்டன. பிறகு அதைப் பார்த்துத்தான் அங்கே மலையாள நாடகங்களை அரங்கேற்றத் துவங்கினார்களாம். நீலக்குயில் என்னும் மலையாளத்தின் முதல் திரைப்படத்தைத் தயாரித்த மெரிலாண்ட் பி.சுப்பிரமணியன் ஒரு தமிழர்தான். அவருடைய மகன் திரு.சந்திரன்தான் தற்போது திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கத்தின் புரவலர்களில் ஒருவர். நீலகண்ட சிவன் அங்கு இருந்திருக்கிறார். பாபநாசம் சிவனின் இளம் வயது திருவனந்தபுரத்தில்தான் கழிந்தது. திருநெல்வேலி, கல்லிடைக்குறிச்சி, ஆழ்வார்குறிச்சி போன்ற இடங்களில் இருந்து நிறைய சமஸ்கிருத பண்டிதர்கள் இங்கு வந்து அரசரின் ஆதரவைப் பெற்று வாழ்ந்திருக்கின்றனர். கெளடில்யரின் அர்த்தசாஸ்திரம், பாஸன் நாடகங்கள் போன்றவற்றையெல்லாம் பதிப்பித்த கணபதி சாஸ்திரி, சாம்பசிவ சாஸ்திரி போன்றோரெல்லாம் இங்குதான் இருந்திருக்கிறார்கள். இப்படி தமிழுக்கும் சமஸ்கிருதத்துக்கும் நிறைய தமிழர்கள் இங்கே தொண்டு புரிந்திருக்கிறார்கள். புதுமைப்பித்தனின் மாமனார் வீடு திருவனந்தபுரம்தான். நகுலன் இருக்கிறார். ஆ.மாதவன், நீலபத்மநாபன், ஹெப்ஸிபா ஜேசுதாசன் இருக்கிறார்கள். அமரர் சண்முகசுப்பையா, அமரர் ஜேசுதாசன் ஆகியோர் இங்குதான் இருந்தார்கள். இப்படி நவீனத் தமிழ் இலக்கியத்துக்கும் திருவனந்தபுரத்துக்கும் நிறைய தொடர்புகள் உண்டு. திருவனந்தபுரத்தில் உள்ள பல்கலைக்கழகத்தின் கல்லூரியின் தமிழ்த்துறை 150 ஆண்டுகள் பழமையானது. வள்ளல் அழகப்ப செட்டியாரின் ஒரு லட்சத்து ஒரு ரூபாய் நன்கொடையில் உருவான கேரளப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை அறுபது ஆண்டுகள் பழமையானது. இந்தத் துறையில் மு.ராகவையங்கார், வையாபுரிப்பிள்ளை, வி.ஐ.சுப்பிரமணியம் ச.வே.சுப்பிரமணியன், மா.இளையபெருமாள் போன்ற மேன்மையான தமிழறிஞர்கள் இங்கு பணிபுரிந்திருக்கிறார்கள். தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் முதல் இரண்டு துணைவேந்தர்களும் உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத் தலைவரும் இங்கிருந்து சென்றவர்கள்தான் என்பது பெருமைக்குரிய விஷயம்.

நன்றி: http://tamil.sify.com/vadakkuvaasal/fullstory.php?id=14453636&page=1

1 comment:

walliehabicht said...

Hard Rock Hotel and Casino Toledo - MapyRO
Hard Rock Hotel and Casino Toledo. 충청북도 출장샵 12300 Hwy 35, Toledo, OH. Driving Directions · 경주 출장안마 1. 2. 3. 나주 출장마사지 5. 6. 원주 출장마사지 7. 8. 9. 출장마사지 10. 11. 12. 13. 14. 15.