Search This Blog

Friday, March 26, 2010

என் முன்மாதிரி

உலகில் வாழும் உயிரினங்கள் தன் எச்சத்தை ஏதோ ஒருவழியில் தன் வழித்தோன்றலுக்கு விட்டுச் செல்கிறது. இவ்வாறு கிடைத்த எச்சங்களே சமூக அமைப்பிற்காக ஏதோ ஒருவகையில் அடித்தளமாக இருக்கிறது. மனிதன் தன் வாழ்நாளில் யாரையோ அல்லது எதையோ ஒன்றை முன்மாதிரியாக வைத்துக் கொள்கின்றான். குழந்தையாக இருக்கும்போது பெற்றோரின் வழிகாட்டுதலிலும் மாணவனாக இருக்கும்போது ஆசிரியரின் வழிகாட்டுதலிலும் இருக்கும் நாம் தன் வாழ்வின் முன்மாதிரியாகச் சில குறிப்பிட்ட நபரை மட்டுமே கொள்கிறோம். தான் முன்மாதிரியாகக் கருதும் அந்த சாதனையாளரின் வாழ்க்கை எனும் கடலில் என் இலக்கிற்கான முத்துக்களைத் தேடிப் பயணிக்கிறேன்.


யார்?


தன்னுடைய கால் எவ்வளவு தூரம் நடந்து சென்றதோ அந்தளவிற்கு மட்டுமே தன் வாழ்நாளில் பயணம் செய்த தூரமாகவும், வசிக்கும் அந்த குக்கிராமமும் அங்கு வாழும் மக்கள் மட்டுமே உலகம் என்றும் வாழ்ந்து கொண்டிருக்கிற அவர், உலகத் தத்துவங்களை அறிந்திருந்தவர்; ஆனால் உலகத்தால் அறியப்படாதவர். நான் உலகமாகக் கருதுவதும் என் முன்மாதிரியும் அவரே.


ஏன்?


சூரியனையே இவர் எழுந்துதான் எழுப்புவார் விடிந்து விட்டதென்று. அதிகாலைப் பொழுதில் தன்னுடைய துண்டைத் தோளில் போட்டுக்கொண்டு வெட்டுவதற்கு மறுப்பேதும் பேசாத மண்வெட்டியுடன், ஆடு மாடுகளையும் அழைத்துக்கொண்டு அரிவாளுடன் சென்று விடும் இவர், தன் வியர்வைத் துளியை மட்டுமே ஈரமாக உணர்ந்த நிலத்தில் இருக்கும் பச்சையும் செம்பழுப்பும் நிறைந்த நெற்பயிர்கள் வெயிலின் உக்கிரத்தில் வாடிவிடாதபடி வெயிலைத் தான் முழுவதுமாக மறைத்து நிழலை அந்தப் பயிர்களுக்கு தரமுடியும் என்று நினைப்பாரோ-என்னவோ, அப்படியரு காட்சியை அந்த வயலின் தெற்கு மூலையில் இருக்கும் கருவமரத்தின் நிழலில் நின்று நான் பார்ப்பேன். நீராரம் மட்டுமே ஆகாரமாகக் கொண்டு சோற்றை எனக்குக் கொடுத்து என் வயிற்றுக்குள் மட்டுமல்ல, என் உடல் முழுவதும் இறைத்து வைத்திருக்கும் அழகைக்கண்டு ரசித்து நிற்பார்.


மத்தியான வெயிலின் உச்சத்தில் கருவமரத்தின் நிழலில் என்னைத் தூங்க வைத்துவிட்டு அவர் தூங்காமல் அருகில் அமர்ந்து பாட்டனும் முப்பாட்டனும் பாடிய நாட்டுப்புறப் பாடல்களைச் சத்தம் போட்டுப் பாடுவார். அவர்கூட வேறு யாரேனும் இருந்தால் பாரதக் கதைகளுக்குப் பஞ்சமில்லை. நான் எழுதும் கவிதைகளுக்கும் கட்டுரைகளுக்கும் கரு அவரென்பது இன்றுதான் தெரிந்தது.


அவருக்கு ஆன்மீகத்தில் அப்படியரு ஈடுபாடு. முண்டாசுக் கவிஞனைப்போல் முரட்டு மீசைகொண்ட அவருக்கு அந்த ஊரே பயப்படும். அவர் ஆண்டவனுக்கு அதிகம் பயப்படுவார். ஆண்டவனின் அடித்தொண்டர் என்பதை நமக்கு அறிவுறுத்தும் அவரின் தோற்றம். அன்றுதான் நான் பார்த்தேன் அவரின் கருமைநிற நெற்றியில் வெந்நிறத்தை. ஆன்மீகச் சிந்தனைகளை வார்த்தைகளால் அல்லாமல் வாழ்ந்து காட்டி பரப்பியவர்.


தீபாவளிக்கும் பொங்கலுக்கும் புத்தாடை அணிந்துகொண்டு தொலைக்காட்சிக்குள் தொலைந்து விடாமல் உறவினர்களைத் தேடிச் சென்று வணங்கி மகிழ்ந்து வாழ்த்தைப் பெறுவதும், கூடும் இடங்களில் அவரவர் வயதொத்தவருடன் பேசி மகிழ்வதும் கொண்டுவந்த திண்பன்டங்களை பகிர்ந்து உண்பது. இதுவே, நான் அவர் அகராதியில் கண்ட தீபாவளிக்கும் பொங்கலுக்குமான பொருள்.


வீட்டைச் சுற்றி மரங்களை வளர்க்க மரக்கன்றுகளை நட்டார். மரமாக வளர வானம் என்னவோ பொய்த்துவிட்ட போதிலும் பயன்படுத்தி வீணாகும் தண்ணீரை மரங்களுக்குப் பயன்பட வைத்தார். இந்த மரங்களுக்கு இன்று வயது அவர் வயதில் பாதி. அன்றிலிருந்து பயன்படுத்திய ஒன்று மற்றொன்றுக்குப் பயன்படுமானால் நான் அதை நன்றாகப் பயன்படுத்திக் கொள்கிறேன் இன்று.


அவர் வாழும் சுற்றுப்புறத்தில் தான் மட்டுமே அதிகமாகப் படித்தவன் என்ற பெருமிதத்தில் ஐந்தாம்வகுப்பு வரை மட்டுமே படித்த இவர் அநேகமானவர்களுக்குக் கல்வியைக் கற்பித்தார். விளையாட்டில்கூட விளையாட்டுத்தனம் இல்லாத இவரிடம் சிலம்பு கற்றவர்கள் சிலர் மட்டுமல்ல. தான் வாழ்ந்த பகுதியில் அனைவரோடும் அன்பாகப் பழகிய இவரின் எச்சம்தான் இன்னும் நீடிக்கிறது.


எதற்கு?


வியர்வையின் பரிசு வெற்றி என்பதை நினைக்க வைத்தவர். பண்பாடு என்பது சமூகத்தின் தூண் எனக் காட்டியவர். உயிர்களிடத்தில் அன்பு காட்ட அடிக்கோடிட்டவர். மரங்களை வளர்ப்பதற்கான மனவளர்ச்சியினைத் தூண்டியவர். ஆன்மீகத்தின் காந்த கற்களாக இருப்பவர். தேனீயைப் போன்று சுறுசுறுப்பும் தேனைப் போன்ற இனிமையும் கொண்ட இவர், வெட்ட வெட்டத் தழைத்தோங்கும் மரங்களைக்காட்டி விடாமுயற்சியினை என்னுள் விதைத்தவர்.


எனது ஆன்மீகம், பண்பாடு, தன்னம்பிக்கை, விடாமுயற்சி எனப் பலவற்றின் கருவூலமாக விளங்குவது குக்கிராமத்தில் வாழும் எனது தந்தை. ஒவ்வொருவருக்கும் அவரவரின் தந்தையே நேரடியாகவும் மறைமுகமாகவும் முன்னோடியாக இருப்பார்கள். இவர் எனது முன்னோடி மட்டுமல்ல; என் வாழ்வே அவர்தான். நானும் நாளை முன்னோடியாக இருப்பேன் என் மகனின் வெற்றிக்கு.


(இது மாநில அளவிலான கட்டுரைப் போட்டியில் மூன்றாம் பரிசு பெற்றது. என்னுடைய பல்வேறு வகையான படைப்புகளில் இதுவுமொன்று.)


முனைவர் ப. குமார்

2 comments:

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

ஜமாலன் said...

பொதுவாக வளரும் காலத்தில் அப்பா அல்லது தந்தை (இரண்டு சொற்களிலும் தத்துவரீதியான வேறுபாடுகள் உண்டு என்றாலும் புழக்கத்தில் ஒன்றாகவே உள்ளது)என்பவரும் நாம் வளர்ந்தபிறகான அப்பாவும் ஒன்றுபோல இருப்பதில்லை. வளரும் பருவத்தில் தந்தை என்பது யதார்த்தமாகவும் அறிந்துகொள்ள முடியாததாகவும் உள்ளது. நாம் வளர்ந்தபின், நம்முடன் சேர்ந்து வளரும் அறிதலும், புரிதலும், கதைகளும்.. அப்பாவை ஒரு கதையாடலாக மாற்றிவிடும்போது, அப்பா என்பவர் யதார்த்தலிருந்து நுட்பமான புரிதல் தளத்திற்குள் பரிணமித்துவிடுகிறார். இது எல்லோருக்கும் நிகழ்வதுதான். இந்த பிரதிக்குள் உள்ள அப்பா என்பவர்.. மொழிவழியாக ஒரு கதையாடல் பாத்திரமாக மாறிவிடுகிறார். அப்பாவிற்கு நம்மால் தரப்படும் மதிப்பளிக்கப்பட்ட, மரியாதைக்குரிய இடம் (ஸ்தானம்) அது.

உங்கள் கட்டுரை எனது அப்பாவைப்பற்றியும் நினைவை அகழ்ந்தது. யோசிக்கும்போது, கதைகள் என்பதன் நுட்பவிதிகள் இப்படித்தான் மொழியால் கட்டப்படுகிறது. இங்கு அப்பாவைவிட அப்பாவைப் பற்றிய நமது புரிதலின் மதிப்பீடு முக்கியமானது. இப்படி எல்லோருக்கும் கதைகளாக நிறைந்த ஒரு அப்பா இருக்கத்தான் செய்கிறார்கள்.