Search This Blog

Monday, August 27, 2007

ஈழத்து இலக்கிய வரலாறு

ஈழத்து இலக்கிய வரலாறு ஈழத்து தமிழ் ஆக்கங்களின் நீண்ட வரலாற்றை, தமிழ் இலக்கியத்திற்கு ஈழத்து தமிழ் இலக்கியத்தின் பங்களிப்பை, தனித்துவத்தை, ஈழத்து இலக்கியத்தின் தொடர்ச்சியை பதிவுசெய்கின்றது.
பழங்காலம் முதற்கொண்டே இலங்கை தமிழ் இலக்கியத்துக்குப்பல பங்களிப்புகளை வழங்கியுள்ளது. இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளில் புலவர் பலர் வாழ்ந்து தமிழ் நூல்கள் பல இயற்றித் தந்துள்ளனர். இருபது நூற்றாண்டுகளுக்கு முன்பே ஈழத்துப் பூதன் தேவனார் என்ற புலவர் அந்த நாட்டினராய்த் தமிழ் வளர்த்திருக்கிறார். அவர் இயற்றிய ஏழு பாட்டுகள் சங்க இலக்கியத்துள் சேர்ந்துள்ளன.
வடமொழி காளிதாசரின் காப்பியத்தின் மொழிபெயர்ப்பாகத் தமிழில் இயற்றப்பட்டுள்ள இரகுவம்சம் என்ற காப்பியம் இலங்கையில் இருந்த புலவராகிய அரசகேசரி என்பரால் (பதினாறாம் நூற்றாண்டில்) இயற்றப்பட்டதாகும். ஈராயிரத்து நானூறு செய்யுள் கொண்ட காப்பியம் அது.
தமிழ்நாட்டில் தலபுராணங்கள் பல எழுந்த காலத்தில் இலங்கையிலும் அத்தகைய புராணங்கள் பல இயற்றப்பட்டன. தமிழ்நாட்டில் கோவை, உலா, கலம்பகம், சதகம், தூது, அந்தாதி முதலான நூல் வகைகள் பெருகிய காலத்தில் இலங்கையிலும் அவ்வகையான நூல்கள் படைக்கப்பட்டன. தக்கிண கைலாச புராணம், கோணாசல புராணம், புலியூர்ப் புராணம், சிதம்பர சபாநாத புராணம் முதலியன இயற்றப்பட்டன. சிவராத்திரிப் புராணம், ஏகாதசிப் புராணம் என்பனவும் அங்குப் பிறந்தவைகளே. சூது புராணம், வலைவீசு புராணம் என்பன புதுமையானவை. கனகி புராணம் என்பது ஒரு தாசியின் வாழ்வு பற்றியது.
கிருஸ்துவச் சமயச் சார்பான தமிழ் நூல்களும் இலங்கையில் இயற்றப்பட்டன. முருகேச பண்டிதர் நீதி நூல் முதலிய சிலவகை நூல்களை இயற்றினார். சிவசம்புப் புலவர் என்ற ஒருவர் செய்யுள் நூல்கள் அறுபது இயற்றினார். ஊஞ்சலாடுதல் பற்றிப் பாடும் ஊஞ்சல் நூல்கள் பல இலங்கையில் இயற்றப்பட்டன.
நவாலியூர்ச் சோமசுந்தரப் புலவர் ஏறக்குறையப் பதினைந்தாயிரம் செய்யுள் இயற்றியுள்ளார். ஆடிப்பிறப்புக் கொண்டாட்டம் முதலியவற்றைச் சுவையான முறையில் எளிய தமிழில் அவர் பாடியுள்ளார். அவ்வாறு பலவகைப் பக்திப் பாடல்களை அவர் இயற்றிப் புகழ் கொண்டார். கதிர்காமம் என்னும் தலத்து முருகக் கடவுளைப் பாடியுள்ள அவருடைய பாடல்களை இன்னும் மக்களை போற்றி வருகிறார்கள்.
நன்றி: http://ta.wikipedia.org

No comments: