Search This Blog

Thursday, August 30, 2007

மொழி ஊழல்

தமிழ்ப்பணி என்பது பதனீரால் பனைவெல்லம் காய்ச்சுவது போன்றதா? என்று கடுவினா எழுப்பினர் பாவலரேறு பெருஞ்சித்திரனார். யாரைப் பார்த்து என்றால், தமிழறிஞர்கள், தமிழரசியலார், கவிஞர்கள், இதழாளர்கள் போன்ற அனைவரையும் பார்த்து!
தமிழறிஞர்கள் கூடி, கம்பனையும் இளங்கோவையும் வள்ளுவரையும் போற்றிவிட்டால் அது தமிழ்ப்பணியா?அரசியலார், தமிழ் வாழ்க! தமிழர் வாழ்க! என்று கூட்டத்தில் முழங்கிவிட்டால் அது தமிழ்ப்பணியா?
கவிஞர்கள், பெண்ணையும் பெண்ணின் கண்ணையும் பாடி, கொஞ்சம் மரம் செடி கொடிகளைப் பாடி, பின்னர் ஏழையையும் ஏழையின் வயிற்றையும் பாடி விட்டால் அது தமிழ்ப்பணியா? பலமொழிகளைக் கலந்து, பெண்களின் ஆடைகளை நழுவவிட்ட/உதறிவிட்ட படங்களைப்போட்டு கோடி கோடியாக தினமும் இதழ்களை விற்றுவிட்டால் அது தமிழ்ப்பணியா? மடற்குழு ஒன்றைத் தொடங்கி அதில் தமிழிலும் எழுதிவிட்டால் அது தமிழ்ப்பணியா? இணைய இதழ் ஒன்று தொடங்கி அதில் உல்லாசத்தையும், ஊருக்கொருவரின் படைப்புகளைப்போட்டு, இலக்கியம், இலக்கணம், அரசியல், நகைச்சுவை, உளறல், பிதற்றல் என்று பலவற்றைப்போட்டு, தனிமனிதர்களின் சிறப்புகளை அரங்கேற்றுவது தமிழ்ப்பணியா? தமிழை நன்கு கற்று, பின்னர் மண்டைக் கிறுக்கெடுத்து, பகையை நக்கி, பல்லிளித்துப் பதவியின் உச்சியில் அமர்ந்து தமிழுக்கும் தமிழர்க்கும் செய்கிறேன் என்ற போர்வையில் மானங்கெட்டலைவது தமிழ்ப்பணியா? ஏழைத்தமிழர் சிலரைக் கூட்டி அவர்க்கு சொக்காய் வாங்கிக் கொடுத்து சோறு போட்டு அனுப்புதல் தமிழ்ப்பணியா? இவையாவும் தமிழ்ப்பணிதான்; இருந்தபோதும் இவையே போதுமா என்று ஒவ்வொருவரும் தம்மைத் தாமே கேட்டுக் கொள்வது வேண்டும். இவையாவும் தமிழ்ப்பணிதான் ஆயினும் பெரும்பாலும் தன்னொழுக்கம் இல்லாதாரால் செய்யப்படும் தமிழ்ப்பணி! இவையாவும் தமிழ்ப்பணிதான்; தமிழாண்மையும் நேர்மையும் குறைந்தோரால் பெரும்பாலும் செய்யப்படும் தமிழ்ப்பணி! தமிழும் தமிழ் நிலமும் பாழ்பட்டுக் கிடக்கின்றன.
இந்நாள் அல்ல அந்நாள் முதற்கொண்டு. காலகாலமாய் திட்டமிடப்பட்டு தமிழ்க் கொலை நிகழ்கின்றது. மொழி தமிழாய் இல்லை. இறை தமிழாய் இல்லை. கல்வி தமிழாய் இல்லை. பண்பும் தமிழாய் இல்லை. பேச்சும் எழுத்தும் தமிழாய் இல்லை. ஆக்கமும் தமிழில் இல்லை; அழிவே உள்ளது. அரசும் தமிழில் இல்லை. அரசர்களும் தமிழுக்கில்லை; செடியொன்று இருந்தால் களை ஆங்கு பத்தாம். பகையைப் போற்றி பகையடி வருடும் தமிழர் ஆயிரமாயிரம். குச்சி மிட்டாய்க்கும் குலத்தைக் காட்டிக் கொடுக்கும் தமிழர் ஆயிரமாயிரம். மூவாயிரமாண்டின் தமிழ் பேசுவான்! மூன்று சங்கங்களையும் மூச்சு விடாமல் பேசுவான்! ஆனால், பகையின் செருப்பை தலையில் சுமப்பான்; அது தமிழ்தான் என்பான்! இப்படியே இந்தக் குமுகாயம் தன்னை மறந்து தன் தேவையை மறந்து எத்தனை நாள் போகும்? போக முடியும்? மறைமலையடிகளார், பாரதிதாசனார், பாவாணர், பெரியார், பெருஞ்சித்திரனார் போன்றோர் எத்தனை முறை தோன்றுவார்கள். இவர்கள் இத்தமிழகத்துக்குத் தந்து போனவற்றை எத்தனை பேர் நடைமுறைப் படுத்துகிறார்கள்? இவர்கள் யாவரையும் நாமறிவோம்! தமிழ் கூறு நல்லுலகம் அறியும். ஆயினும் அன்னார் சொன்னவற்றை நாம் பயின்றும் பழக்கத்தில் கொண்டு வருவதில்தான் நாம் சோம்பிக்கிடக்கிறோம். அல்ல, அல்ல! இன்னும் மாயைக்குள் கிடக்கிறோம்.
தமிழிலே களைகள். தமிழர்களிடையே பகைவரோடு களைகளும்!தமிழர்களுக்கு இடையே களைகள்; இறைவனுக்கும் தமிழனுக்கும் இடையே களைகள்! தமிழுக்கு இருக்கும் இன்றைய சிக்கல்களை மேலோட்டமாக எதிர்ப்பதுவும், அலசுவதும், நுனிக்கிளையில் அமர்ந்து அடியை வெட்டுவது போன்றாகும். இதோ, நான் தமிழன்! தமிழெங்கள் உயிருக்கு நேர்!; என்று பேசுவதெல்லாம் போதாது! ஈராக்கிலே அமெரிக்கா குண்டைப் போட்டால் அமெரிக்கப் பொருள்களைப் புறக்கணிப்போம் என்று குரல்கள் உலகெங்கும் ஒலிக்கின்றன! பிரித்தானியப் பொருள்களை வாங்காதே, பயன்படுத்தாதே என்று காந்தியார் சொன்னபோதுதான் பிரித்தனுக்கு மிகவும் உரைத்தது. எங்கே அடிக்க வேண்டுமோ அங்கே அடித்தால்தான் அகல வேண்டியது அகலும்; அதேபோல், தமிழுக்கும் தமிழருக்கும் வேதனை தருவது யாது? யாவர்?
மொழியிலே, எழுத்திலும் பேச்சிலும் புரளும் மொழிக்கலப்பு ஒரு வேதனை!இறைவனுக்கு இடையே திரைபோடும் அயன்மொழி ஒரு வேதனை! நாமும், தமிழிலே இறைப் பாடல்கள் பாட வேண்டும் என்று கதறுகிறோம்!கேட்பாரில்லை! பகைவர் கேட்கமாட்டார். ஏன் கேட்க மாட்டார் என்றால், நம்மிடம் தன்னொழுக்கம் இல்லை. நமது எழுத்துக்களில் பகையைப் புழங்கவிட்டு விட்டு, இறைவனடியில்மட்டும் அதைச் சேர்க்காதே என்றால் பகைவர் விடுவாரா? சிரித்துவிட்டு நம்மை இளிக்க வைப்பார்கள். அதே நேரத்தில், தமிழ்ப்பகைவர்களை கேள்வி கேட்க நமக்கு அருகதை இருக்கிறதா என்று எண்ணிப் பார்க்க வேண்டும்! அதற்கான தன்னொழுக்கம் நமக்கு உண்டா என்று எண்ணிப் பார்க்க வேண்டும். நமது எழுத்துக்களில் வடமொழியை புழங்கவிட்டு விட்டு, பகைவர் நம் இறையின்முன்னே வடமொழியில் புழங்குகிறார் என்று கூவினால் அது பம்மாத்து! எப்படி காந்தியார் பிரித்தானியப் பொருட்களை வாங்காதீர் என்று மக்களுக்கு எடுத்துச் சொல்லி வெற்றி கண்டாரோ, அதே பாங்கில்தான் மறைமலையாரும், பாரதிதாசனும், பெருஞ்சித்திரனாரும் இன்னும் இவரைப்போன்ற பலரும் எடுத்துச் சொன்னார்கள். ஆனால், இந்தப் பாழுஞ்சமுதாயம் அதை எடுத்துக் கொள்ளாமல், மேலும் தமிழை சிதைத்து வைத்ததைத்தான் அண்மைக்கால வரலாறு நமக்கு எடுத்துக் கூறுகிறது. ஒவ்வொரு தமிழனும், படிப்பு படித்த பிறகு வடமொழியைக் கலந்து தமிழைச் சிதைக்கும் மூடனாகி விடுகிறான். படிக்காத கிராம மக்களைப் பார்த்தால், தூய தமிழ் பேச்சு பால் பொங்கினாற்போலப் பொங்கும்.
இந்த ஒழுக்கங்கெட்ட மானங்கெட்ட நிலையில் இருந்து தமிழன் முழுமையாக விலகும் நாளே தமிழ் மறுமலர்ச்சி காலமாகும். எழுத்துக்கள் அறிவின் பால் வருகின்றது. அதைக் கலைமகள் என்று சொல்வர். தமிழிலே பிறமொழியைக் கலப்பது கலைமகள் அருகில் பீடையையோ அல்லது மூதேவியையோ அமரச் செய்வதற்கு ஒப்பாகும்.
நன்னீரில் சாக்கடைத்துளிகளை விடுவதற்கு ஒப்பாம் மொழிக்கலப்பிற்குட்பட்ட தமிழ். தமிழர் வேதனைகளின் அடிப்படையே இந்த மொழிக்கலப்பில்தான். தமிழில் எழுதும்போது என்ன ஒவ்வொருவரையும் உடல்வலிக்க வேலை செய்யவாச் சொல்கிறார்கள்? பிறமொழி எழுத்தைச் சேர்க்காதே என்று மட்டும்தான் சொல்கிறார்கள்! ஆங்காங்கே தமிழில் தொற்றிக்கொள்ளும் அழுக்கை நீக்கி விட்டு எழுதுங்கள்; அப்படியே பழகுங்கள்; பிள்ளைகளையும் பழக்குங்கள்; தமிழிலெயே பேசுங்கள்; என்றுதான் சொல்கிறார்கள். ஆக்கிரமிக்கும் படைகளின் நாடுகளின் பொருட்களை அருவெறுப்புடன்பார்த்து அகற்ற நினைக்கும் மனிதகுலத்தின் அதே மாண்புதான் இங்கும் தேவைப்படுகிறது.
மொழியில் பிறமொழி ஆக்கிரமிப்பை அகற்றவேண்டுமாயின் அயன்மொழியை தம் எழுத்தில் பேச்சில் அகற்றத்தானே வேண்டும்? அதைச் செய்யாமல், தமிழ் வாழ்க! கோயிலுக்குள் தமிழில் மணி அடிப்போம் என்று சொன்னால் நம்மைப் பார்த்து நகைக்கத்தானே செய்யும் பகை! அதை உணர வேண்டாமா? அது நமது கடமையல்லவா? மொழிக்கலப்பு விசயத்தில் தமிழ் எழுதுபவர்களை நான்காகப் பிரிக்கலாம். 1)தூய மொழித் தமிழர்கள். 2)அயன்மொழிப் பகைவர்கள். 3) அயன்மொழி கலந்த தமிழ் எழுதும் தமிழர்கள். 4)எது தெரியுமோ அதை எழுதும் அப்பாவித் தமிழர்கள் இரண்டாவது வகையினரைப் பற்றிக் கவலைப்படவேண்டாம். அவர்கள் மாற மாட்டார்கள். அவர்கள் மாற வேண்டிய அவசியமும் இல்லை. மூன்றாவது வகையினரில் பேரறிஞர்கள் வரை உண்டு. இவர்கள் இச்சிக்கலைப்பார்க்கும் கண்ணோட்டம் மிகவும் கோழைத்தனமானது.
மொழி என்றால் புரிய வைப்பதற்குத்தானே என்று நினைப்பது ஒரு புறம்; மற்றொரு புறத்தில் தூய தமிழ் எழுதினால் தீயதமிழன் என்று நினைப்பார்களோ என்று அச்ச மற்றும் கோழை உணர்வு. யாருக்காக அய்யுறுகிறார்கள் என்று தெரியவில்லை. அல்லது நமக்கேன் வம்பு, எல்லோருக்கும் நல்ல பிள்ளையாய் இருப்போமே என்ற கோழைத்தனம் அன்றி வேறேதும் இருப்பதாகத் தெரியவில்லை. ஒரு தெருவின் பாராட்டு வேண்டி ஊரையே கெடுப்பவர்கள்தான் இவ்வகையினர் என்றால் அதைமறுக்க யாரால் ஏலும்? நான்காவது வகையினர் பெரும்பான்மையினர். முதல் வகையும் மூன்றாம் வகையும் ஒன்றானால், இந்த நான்காம் வகை சீர் பெறும். தமிழ் வளம் பெறும். தமிழர் நேர்மை பெறுவர். தமிழ் எழுத்துக்களில் பிற மொழி கலந்து எழுதுவது "மொழி ஊழல்" ஆகும். அந்த ஊழலை தமிழர் தவிர்த்து தமிழின் மானத்தையும் தன் மானத்தையும் காக்க வேண்டியபொறுப்பு அனைவர்க்கும் உண்டு. அதுதான் தமிழ்ப்பணியும் கூட!இந்த அடிப்படையை மறந்து செய்யும் எந்தத் தமிழ்ப்பணியும் தன்னொழுக்கம் இல்லாத தமிழ்ப் பிணிதான்என்பதில் அய்யமில்லை.
நன்றி: http://tamil.sify.com/

No comments: