Sunday, September 26, 2010



Friday, March 26, 2010

என் முன்மாதிரி

உலகில் வாழும் உயிரினங்கள் தன் எச்சத்தை ஏதோ ஒருவழியில் தன் வழித்தோன்றலுக்கு விட்டுச் செல்கிறது. இவ்வாறு கிடைத்த எச்சங்களே சமூக அமைப்பிற்காக ஏதோ ஒருவகையில் அடித்தளமாக இருக்கிறது. மனிதன் தன் வாழ்நாளில் யாரையோ அல்லது எதையோ ஒன்றை முன்மாதிரியாக வைத்துக் கொள்கின்றான். குழந்தையாக இருக்கும்போது பெற்றோரின் வழிகாட்டுதலிலும் மாணவனாக இருக்கும்போது ஆசிரியரின் வழிகாட்டுதலிலும் இருக்கும் நாம் தன் வாழ்வின் முன்மாதிரியாகச் சில குறிப்பிட்ட நபரை மட்டுமே கொள்கிறோம். தான் முன்மாதிரியாகக் கருதும் அந்த சாதனையாளரின் வாழ்க்கை எனும் கடலில் என் இலக்கிற்கான முத்துக்களைத் தேடிப் பயணிக்கிறேன்.


யார்?


தன்னுடைய கால் எவ்வளவு தூரம் நடந்து சென்றதோ அந்தளவிற்கு மட்டுமே தன் வாழ்நாளில் பயணம் செய்த தூரமாகவும், வசிக்கும் அந்த குக்கிராமமும் அங்கு வாழும் மக்கள் மட்டுமே உலகம் என்றும் வாழ்ந்து கொண்டிருக்கிற அவர், உலகத் தத்துவங்களை அறிந்திருந்தவர்; ஆனால் உலகத்தால் அறியப்படாதவர். நான் உலகமாகக் கருதுவதும் என் முன்மாதிரியும் அவரே.


ஏன்?


சூரியனையே இவர் எழுந்துதான் எழுப்புவார் விடிந்து விட்டதென்று. அதிகாலைப் பொழுதில் தன்னுடைய துண்டைத் தோளில் போட்டுக்கொண்டு வெட்டுவதற்கு மறுப்பேதும் பேசாத மண்வெட்டியுடன், ஆடு மாடுகளையும் அழைத்துக்கொண்டு அரிவாளுடன் சென்று விடும் இவர், தன் வியர்வைத் துளியை மட்டுமே ஈரமாக உணர்ந்த நிலத்தில் இருக்கும் பச்சையும் செம்பழுப்பும் நிறைந்த நெற்பயிர்கள் வெயிலின் உக்கிரத்தில் வாடிவிடாதபடி வெயிலைத் தான் முழுவதுமாக மறைத்து நிழலை அந்தப் பயிர்களுக்கு தரமுடியும் என்று நினைப்பாரோ-என்னவோ, அப்படியரு காட்சியை அந்த வயலின் தெற்கு மூலையில் இருக்கும் கருவமரத்தின் நிழலில் நின்று நான் பார்ப்பேன். நீராரம் மட்டுமே ஆகாரமாகக் கொண்டு சோற்றை எனக்குக் கொடுத்து என் வயிற்றுக்குள் மட்டுமல்ல, என் உடல் முழுவதும் இறைத்து வைத்திருக்கும் அழகைக்கண்டு ரசித்து நிற்பார்.


மத்தியான வெயிலின் உச்சத்தில் கருவமரத்தின் நிழலில் என்னைத் தூங்க வைத்துவிட்டு அவர் தூங்காமல் அருகில் அமர்ந்து பாட்டனும் முப்பாட்டனும் பாடிய நாட்டுப்புறப் பாடல்களைச் சத்தம் போட்டுப் பாடுவார். அவர்கூட வேறு யாரேனும் இருந்தால் பாரதக் கதைகளுக்குப் பஞ்சமில்லை. நான் எழுதும் கவிதைகளுக்கும் கட்டுரைகளுக்கும் கரு அவரென்பது இன்றுதான் தெரிந்தது.


அவருக்கு ஆன்மீகத்தில் அப்படியரு ஈடுபாடு. முண்டாசுக் கவிஞனைப்போல் முரட்டு மீசைகொண்ட அவருக்கு அந்த ஊரே பயப்படும். அவர் ஆண்டவனுக்கு அதிகம் பயப்படுவார். ஆண்டவனின் அடித்தொண்டர் என்பதை நமக்கு அறிவுறுத்தும் அவரின் தோற்றம். அன்றுதான் நான் பார்த்தேன் அவரின் கருமைநிற நெற்றியில் வெந்நிறத்தை. ஆன்மீகச் சிந்தனைகளை வார்த்தைகளால் அல்லாமல் வாழ்ந்து காட்டி பரப்பியவர்.


தீபாவளிக்கும் பொங்கலுக்கும் புத்தாடை அணிந்துகொண்டு தொலைக்காட்சிக்குள் தொலைந்து விடாமல் உறவினர்களைத் தேடிச் சென்று வணங்கி மகிழ்ந்து வாழ்த்தைப் பெறுவதும், கூடும் இடங்களில் அவரவர் வயதொத்தவருடன் பேசி மகிழ்வதும் கொண்டுவந்த திண்பன்டங்களை பகிர்ந்து உண்பது. இதுவே, நான் அவர் அகராதியில் கண்ட தீபாவளிக்கும் பொங்கலுக்குமான பொருள்.


வீட்டைச் சுற்றி மரங்களை வளர்க்க மரக்கன்றுகளை நட்டார். மரமாக வளர வானம் என்னவோ பொய்த்துவிட்ட போதிலும் பயன்படுத்தி வீணாகும் தண்ணீரை மரங்களுக்குப் பயன்பட வைத்தார். இந்த மரங்களுக்கு இன்று வயது அவர் வயதில் பாதி. அன்றிலிருந்து பயன்படுத்திய ஒன்று மற்றொன்றுக்குப் பயன்படுமானால் நான் அதை நன்றாகப் பயன்படுத்திக் கொள்கிறேன் இன்று.


அவர் வாழும் சுற்றுப்புறத்தில் தான் மட்டுமே அதிகமாகப் படித்தவன் என்ற பெருமிதத்தில் ஐந்தாம்வகுப்பு வரை மட்டுமே படித்த இவர் அநேகமானவர்களுக்குக் கல்வியைக் கற்பித்தார். விளையாட்டில்கூட விளையாட்டுத்தனம் இல்லாத இவரிடம் சிலம்பு கற்றவர்கள் சிலர் மட்டுமல்ல. தான் வாழ்ந்த பகுதியில் அனைவரோடும் அன்பாகப் பழகிய இவரின் எச்சம்தான் இன்னும் நீடிக்கிறது.


எதற்கு?


வியர்வையின் பரிசு வெற்றி என்பதை நினைக்க வைத்தவர். பண்பாடு என்பது சமூகத்தின் தூண் எனக் காட்டியவர். உயிர்களிடத்தில் அன்பு காட்ட அடிக்கோடிட்டவர். மரங்களை வளர்ப்பதற்கான மனவளர்ச்சியினைத் தூண்டியவர். ஆன்மீகத்தின் காந்த கற்களாக இருப்பவர். தேனீயைப் போன்று சுறுசுறுப்பும் தேனைப் போன்ற இனிமையும் கொண்ட இவர், வெட்ட வெட்டத் தழைத்தோங்கும் மரங்களைக்காட்டி விடாமுயற்சியினை என்னுள் விதைத்தவர்.


எனது ஆன்மீகம், பண்பாடு, தன்னம்பிக்கை, விடாமுயற்சி எனப் பலவற்றின் கருவூலமாக விளங்குவது குக்கிராமத்தில் வாழும் எனது தந்தை. ஒவ்வொருவருக்கும் அவரவரின் தந்தையே நேரடியாகவும் மறைமுகமாகவும் முன்னோடியாக இருப்பார்கள். இவர் எனது முன்னோடி மட்டுமல்ல; என் வாழ்வே அவர்தான். நானும் நாளை முன்னோடியாக இருப்பேன் என் மகனின் வெற்றிக்கு.


(இது மாநில அளவிலான கட்டுரைப் போட்டியில் மூன்றாம் பரிசு பெற்றது. என்னுடைய பல்வேறு வகையான படைப்புகளில் இதுவுமொன்று.)


முனைவர் ப. குமார்

Wednesday, April 8, 2009

வரலாறு படைப்போம் வாரீர்!!

கற்பனைக் கூடத்தில்
களவாடப்பட்ட – என்
எண்ணங்களுக்கு
வண்ணங்களடித்து
வாழ்த்துப் பாடல் பாடியது போதும்...

முதிர்ந்த தலைமுறை கொண்ட
முத்தமிழை – முதல்
தலைமுறையாம்
அறிவியல் தமிழில்
அறியணை ஏற்றுவோம்...

சாதியின் வீணையில்
சங்கீதம் கற்காமல் – முன்பே
உயிர்விட்ட முண்டாசுக் கவிஞனின்
வரிகளுக்கு உயிர் கொடுப்போம்...

கனவுகள் காண்போம்
கலாம் உடைய கனவுகளுக்குள் புகுந்து
கந்தக பூமியில்
கல்விச்சாலைகள் மட்டும் இருப்பதாக...

பத்துப் பைசா
புழக்கத்தில் இல்லை – ஆனால்
செல்லிடப்பேசியில் மட்டும் செல்லுகிறது
பத்துப் பைசா பசியை ஆற்றிட
பசுமைப் புரட்சி செய்திடுவோம்...

கல்லூரிக் காண்போம்
கட்டடங்களாக இல்லாமல்
விவசாயிகளைக் கொண்ட
விளை நிலங்களாக...

வண்ணத்துப்பூச்சியின்
வண்ணங்கள் மாறுவதை நிறுத்துவோம்
புகை இல்லாத பூமியைக் கொண்டு...

போராடத் தெரிந்த உனக்கு
ஊனம் ஒரு ஊன்றுகோல்
வானம் ஒரு எல்லைக்கோடு...

வரலாறு படைத்திட – நாம்
வரலாறு படைத்திட
வரலாறாகவே மாறுவோம் – நாம்
வரலாறாகவே மாறுவோம்.

- ப. குமார்

Tuesday, August 5, 2008

முன்னாள் துணைவேந்தர் ச.அகத்தியலிங்கம் மறைவு


தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும் உலக அளவில் மொழியியல் துறையில் புகழ்பெற்றவருமான முனைவர் ச.அகத்தியலிங்கம் அவர்கள் (அகவை 79) புதுச்சேரி அருகே கிளியனூர் காமராசர் குடியிருப்பு அருகில் நடைபெற்ற மகிழ்வுந்து விபத்தில் 04.08.2008 திங்கள் கிழமை காலை 11 மணியளவில் நேர்ச்சி இடத்திலேயே இறந்தார். அவர் துணைவியார் பொன்னம்மாள்அவர்களும் (அகவை 78) ஓட்டுநர் சீவபாலன் (அகவை 28) அவர்களும் சிப்மர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற பிறகு இறந்தனர். அகத்தியலிங்கனாரின் பெயர்த்தி இலதா பிரியா(அகவை 22) மருத்துவமனையில் சேர்க்கப்பெற்றுள்ளார்.


மறைந்த துணைவேந்தர் அவர்களுக்கு இரண்டு பெண்மக்கள். 1.சண்முகசுந்தரி. இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் அஞ்சல்வழிக் கல்விப் பிரிவில் திருச்சி அலுவலகத்தில் பணிபுரிகிறார். 2.அருணாசலவடிவு. இவர் சென்னைப்பல்கலைக்கழகத்தில் பேராசிரியராப் பணிபுரிகின்றார். துணைவேந்தரின் மறைவைக் கேள்வியுற்ற அவரின் குடும்பத்தினரும், நண்பர்களும் மாணவர்களும் உடல் வைக்கப்பெற்றுள்ள சிப்மர் மருத்துவமனைக்குத் திரண்டுவந்துள்ளனர்.


இன்று (05.08.2008) நண்பகல் மருத்துவமனை உடற்கூறு ஆய்வுக்குப்பிறகு பிற்பகல் 3 மணியளவில் துணைவேந்தர் வாழ்ந்து வந்த சிதம்பரம் மாரியப்பா நகரில் உள்ள அவர்தம் இல்லத்தில் மக்களின் பார்வைக்குத் துணைவேந்தரின் உடல் வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.சென்னைப்பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர் பொற்கோ பேராசிரியர் செ.வை.சண்முகம் உள்ளிட்ட அறிஞர்கள் ச.அகத்தியலிங்கனாரின் உடலுக்கு வணக்கம் செலுத்த உள்ளனர்.


முனைவர் ச.அகத்தியலிங்கனாரின் வாழ்க்கைக் குறிப்பு
ச.அகத்தியலிங்கனார் நாகர்கோயில் அருகில் உள்ள கேசவன்புதூரில் 1929 ஆகத்து மாதம் 19 ஆம் நாள் பிறந்தவர். பெற்றோர் சண்முகம் பிள்ளை அருணாசல வடிவு.நாகர் கோயில் இந்து கல்லூரியில் இளம் அறிவியல் கணக்குப்பாடம் பயின்ற இவர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் முதுகலைத் தமிழ் இலக்கியம் பயின்றவர். இங்குப் பயிலும்பொழுது குமரி அனந்தன் அவர்கள் இவருக்கு நெருங்கிய நண்பரானார்.


கேரளா பல்கலைக்கழகத்தில் புகழ்பெற்ற பேராசிரியர் வி.ஐ.சுப்பிரமணியன் அவர்களின் மேற்பார்வையில் மொழியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றார். பிறகு அமெரிக்காவில் உள்ள இந்தியானா பல்கலைக்கழகத்தில் மற்றுமொரு முனைவர் பட்டம் பெற்றார். இவ்வாறு அமெரிக்காவில் இவர் முனைவர் பட்டம் பெற்றபொழுது உலகின் மிகச்சிறந்த மொழியியல் அறிஞர்களிடம் பாடம் கேட்கும் வாய்ப்பைப் பெற்றார்.


மொழியியல் துறையில் தமிழ் மொழியின் சிறப்பு அறியப்படாமல் இருந்தது. இம் மேல்நாட்டுச் சிந்தனை மரபை உடைத்துத் தமிழுக்கு உலக அளவில் புகழ் கிடைக்கவும் உலக மொழியியல் அறிஞர்கள் தமிழின் பக்கம் கவனத்தைத் திருப்பவும் அகத்தியலிங்கனாரின் பணி குறிப்பிடும்படியாக இருந்தது. அயல்நாட்டு மாணவர்கள் தமிழ் கற்கவும் தமிழ்மொழியின் அமைப்பை ஆராயவுமான சூழலை உருவாக்கியவர் அகத்தியலிங்கனார். பொற்கோ கி.அரங்கன் கருணாகரன் செ.வை.சண்முகம் க.இராமசாமி உள்ளிட்ட அறிஞர்கள் மொழியியல் துறையில் சிறந்த ஆய்வுகளை நிகழ்த்த நம் அகத்தியலிங்கனார் காரணமாக அமைந்தார்கள். இவரிடம் மொழியியல் கற்றவர்கள் உலக அளவில் உள்ளனர். இவர் தமிழ் ஆங்கிலம் மலையாளம் மொழிகளில் நல்ல புலமைபெற்றவர்.


அகத்தியலிங்னார் தாம் பயின்ற இந்து கல்லூரியில் தமிழ்விரிவுரையாளர் பணியைத் தொடங்கித் தில்லிப் பல்கலைக்கழகத்தில் சில காலம் இணைப்பேராசிரியராகப் பணியாற்றினார். 1968 முதல் 1989 வரை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மொழியியல் துறையில் இயக்குநராகவும் பேராசிரியராகவும் பணிபுரிந்தார். தமிழ்த்துறையில் புல முதன்மையராகவும் பணிபுரிந்தவர். சிக்காகோ பல்கலைக்கழகத்தில் மூன்றாண்டுகள் வருகைதரு பேராசிரிராகவும் பணிபுரிந்த பெருமைக்கு உரியவர். தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக மூன்றாண்டுகள் பணிபுரிந்தவர்.உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் வருகைதரு பேராசிரியாகவும் மைசூர் செம்மொழி நிறுவனத்தில் முதுநிலை ஆய்வறிஞராகவும் பணிபுரிந்த பெருமைக்கு உரியவர். உலக அளவில் பல்வேறு பல்கலைக்கழகங்கள் தமிழ் அமைப்புகள் மொழியியல் அமைப்புகளில் பொறுப்பு வகித்த பெருமைக்கு உரியவர். அனைத்து இந்திய மொழியியல் கழகத்தை உருவாக்கியவர்களில் குறிப்பிடத்தக்கவர். இதன் வழியாக தரமான தமிழ் மொழியியல் ஆய்வுகள் வெளிப்பட்டன. பல ஆய்வாளர்கள் உருவானார்கள். அண்ணாமலைப்பல்கலைக்கழக வரலாற்றிலும் மொழியியல் வரலாற்றிலும் அகத்தியலிங்கனாரின் பணிகள் என்றும் நினைவுகூரும் வண்ணம் பல உள்ளன.


அகத்தியலிங்கனார் தமிழில் 24 நூல்களையும் ஆங்கிலத்தில் 9 நூல்களையும் எழுதியுள்ளார். 200 மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை வரைந்த மெருமைக்கு உரியவர். இவை யாவும் மொழியியல், சங்க இலக்கியம், தொல்காப்பியம் பற்றியன என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும். உலக மொழிகள் பற்றி இவர் எழுதிய நூல்கள் உலக மொழிகள் பலவற்றின் வரலாற்றையும் சிறப்பையும் அதன் அமைப்புகளையும் நமக்கு எடுத்துரைக்கின்றன. அதுபோல் சங்க இலக்கியம் குறித்துச் சங்கத்தமிழ் என்னும் பெயரில் 5 தொகுதிகளை எழுதியுள்ளார். உலகமொழிகள் என்ற வரிசையில் 7 தொகுதிகள் வெளிவந்துள்ளன. தொல்காப்பியம் பற்றி 3 தொகுதிகள் வெளிவந்துள்ளன. இவர்தம் தமிழ், ஆங்கிலக் கட்டுரைகள் பலவும் உலகத்தரம் வாய்ந்த இதழ்களில் வெளிவந்துள்ளன.


அகத்தியலிங்கனார் இதுவரை 55 முனைவர் பட்ட ஆய்வாளர்களுக்கு நெறியாளராக இருந்து நெறிப்படுத்திய பெருமைக்கு உரியவர். இவரின் மொழியியல் பணிகள் ஆய்வுகள் நூல்கள் இவருக்கு உயரிய விருதுகள் பட்டங்கள் பதவிகள் கிடைக்க காரணமாயின. அவ்வகையில் இவர் தமிழக அரசின் திரு.வி.க.விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார். உலக நாடுகள் பலவற்றிற்கு இவர் பயணம் செய்து தமிழின் பெருமை பற்றி பேசிய பெருமைக்கு உரியவர். பல பல்கலைக்கழகங்களில் கல்விக்குழு அறிவுரைஞர் குழு எனப் பலவற்றறில் இணைந்து பணிபுரிந்த பெருமைக்கு உரியவர்.


பணி ஓய்வு பெற்ற பிறகும் தம் இலத்தில் அமர்ந்தபடியே பல்வேறு ஆய்வுகளைச் செய்துவந்தார். உலக நாடுகள் இவரை அழைத்துப்பெருமை கொண்டன. அவ்வகையில் அண்மையில் சிங்கப்பூர் சென்று ஆய்வரங்கில் கலந்துகொண்டு உரையாற்றி மீண்டுள்ளார். எதிர்பாராமல் நடந்த சாலை விபத்தில் இயற்கை எய்திய ச.அகத்தியலிங் கனாரின் பிரிவு அறிந்து தமிழ் அறிஞர் உலகமும் மொழியியல் துறையினரும் கலங்கிநிற்கின்றனர்.



- நன்றி

மு இளங்கோவன்

புதுச்சேரி

Friday, October 12, 2007

நிழல் (கவிதை)

மண்மீது
பரவித் தெரியும்
எனது நிழல்-
என்னைவிட
அழகாக இருப்பதால்
பரிசித்து
முத்தமிடத்
தேடுகிறேன்-
தொல்பொருள்
ஆய்வாளனைப்போல.

தோன்டிய மண்ணும்
ஏனோ
வெறுமையாக உதிர்கிறது.
அப்படியானால்
எனது நிழல்
என்னைப்போல
தனிமையானதா
அதுவும் அநாதைதானே?

உக்கிரம் நிறைந்த
பாட்டுக்குள்
பாவமாய்
ஆட்டக்காரச்
சிறுவனைப் போல
மண் மீது
வீடு கட்டுகிறேன்.

எனது
அன்பிற்குரிய
நிழலுக்காக!

- மு. ரமேஷ்


(இவர் என்னுடைய நண்பர், இவருடைய கவிதைகள் நவீன இலக்கியத் தளங்களில் நின்று பேசுபவை. இந்தப் பக்கத்தில் பதிவு செய்வதற்கு என்னிடம் கொடுத்த பல கவிதைகளில் இது ஒன்று.)


Tuesday, October 9, 2007

தமிழக வரலாறு

"வட வேங்கடம் தென் குமரி தமிழ் கூறு நல்லுலகு" என்கிறது தொல்காப்பியப் பாடல்.

தமிழ்நாடு, ஏறத்தாழ 6000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான வரலாற்றைக் கொண்டுள்ளது. இங்கே வாழுகின்ற திராவிட இன மக்களின் தோற்றம் (origin) தொடர்பாகப் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. சிலர், ஒரு காலத்தில் இந்தியா முழுதும் பரவி வாழ்ந்திருத்த திராவிடர், சிந்து வெளி நாகரீகத்துக்கு உரியவர்களுள் ஒரு பிரிவினராக இருந்தனர் என்று கருதுகிறார்கள். இவ்வினத்தவருடைய தெற்கு நோக்கிய பெயர்வு, ஆரிய ஆக்கிரமிப்புக் கொள்கையுடன் தொடர்பு படுத்தப் படுகின்றது. இக் கொள்கைப்படி, வடக்கிலிருந்து வந்த ஆரிய ஆக்கிரமிப்பு திராவிடர்களை இன்றைய இந்திய மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம், கேரளா ஆகியவை அடங்கிய தென்னிந்தியாவுக்குள் ஒடுக்கியதாகக் கருதப்படுகின்றது. வரலாற்று உண்மைகள் எவ்வாறு இருப்பினும், தற்காலத் தமிழ் மக்களுடைய அடையாளம் மேற்கண்ட கொள்கைகளின் அடிப்படையிலேயே வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது எனலாம்.

இன்றைய தமிழ்நாட்டையும் உள்ளடக்கிப் பரந்திருந்த பண்டைய திராவிட நாடு, பல்வேறு நாடுகளாகப் பிரிந்திருந்தது. இவற்றைக் காலத்துக்குக் காலம் பல அரச வம்சங்கள் ஆண்டுவந்தன. இவற்றுள் முக்கியமாகக் குறிப்பிடத்தக்கவர்கள், பாண்டியர், சேரர், சோழர், பல்லவர், சாளுக்கியர், விஜய நகரத்தார், நாயக்கர் என்போராவர்.

பாண்டியர்களுடைய காலம் கி.மு ஆறாம் நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே தொடங்குவதாகச் சொல்லப்படுகின்றது. மதுரை முதற் பாண்டிய மன்னனான குலசேகர பாண்டியனால் கட்டப்பட்டதாகச் சொல்லப்படுகின்றது. மேலே குறிப்பிடப்பட்ட மதுரை தற்கால மதுரைக்குத் தெற்கே அமைந்திருந்து பிற்காலத்தில் ஏற்பட்ட கடல்கோளினால் முற்றாக அழிந்து போனதாகப் பழந் தமிழ் இலக்கியங்கள் வாயிலாக அறியக்கிடக்கின்றது. பாண்டிய நாடு கல்வியிலும், வணிகத்திலும் சிறந்து விளங்கியது. இவர்கள் அக்காலத்தின் பேரரசுகளாகிய கிரேக்க, ரோமப் பேரரசுகளுடன் வணிகத் தொடர்பு கொண்டிருந்தனர். அவ்வப்போது பல்லவர்களாலும், சோழர்களாலும் அடக்கப் பட்டிருந்தாலும், தமிழ்நாட்டின் பலம் மிக்க அரச வம்சங்களில் ஒன்றாகப் பாண்டியர் விளங்கினர்.

கி.பி 1 முதல் 4 ஆம் நூற்றாண்டு வரை

முற்காலச் சோழர் கி.பி முதலாம் நூற்றாண்டு தொடக்கம் நான்காம் நூற்றாண்டு வரை தமிழகத்தில் ஆட்சி செலுத்தினர். இவர்களுள் மிகப் புகழ் பெற்றவனாக கரிகால் சோழன் விளங்கினான். தற்காலத் தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிகளில் செல்வாக்குச் செலுத்திய இவர்கள், யுத்த நடவடிக்கைகளில் சிறந்து விளங்கினர்.

கி.பி 4 முதல் 9 ஆம் நூற்றாண்டு வரை

கி.பி நான்காம் நூற்றாண்டின் பிற்பாதியில், சிறந்த கோவில்களை அமைத்த பல்லவர்கள் முன்னணிக்கு வந்தனர். இவர்கள் தென்னிந்தியாவில் 400 ஆண்டுகள் ஆதிக்கம் செலுத்தினர். காஞ்சிபுரத்தைத் தலை நகரமாகக் கொண்டு தமிழ் நாட்டின் பெரும்பகுதியைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். ஆறாம் நூற்றாண்டில் பல்லவர்கள் சோழரைத் தோற்கடித்தனர். இவர்கள் செல்வாக்கு இலங்கை வரை பரவியிருந்ததாகக் கருதப்படுகின்றது. முதலாம் மகேந்திரவர்மனும், அவனுடைய மகனான நரசிம்மவர்மனும் பல்லவர்களுள் சிறந்து விளங்கிய அரசர்களாவர். திராவிடக் கட்டிடக்கலை பல்லவர் காலத்திலேயே உருப்பெற்றது. இறுதிப் பல்லவ மன்னன் அபராஜிதன் ஆவான். இவன் கி.பி ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் ஆதித்த சோழனால் தோற்கடிக்கப்பட்டதுடன் பல்லவராட்சி தமிழ் நாட்டில் முடிவுக்கு வந்தது.
இக்காலகட்ட பகுதியில் (கி.பி. 300- கி.பி. 600) பெளத்தம் தமிழகத்தில் மிகவும் செல்வாக்கோடு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

9 முதல் 13 ஆம் நூற்றாண்டு வரை

கி.பி ஒன்பதாம் நூற்றாண்டில் சோழர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தனர். இராஜராஜ சோழன் மற்றும் அவனது மகனான இராஜேந்திர சோழன் ஆகியோரது காலத்தில் சோழர், தென்னிந்தியாவில் ஒரு பலம் மிக்க சக்தியாக உருவெடுத்தனர். இவர்களுடைய பேரரசு, மத்திய இந்தியா, ஒரிஸ்ஸா, மற்றும் வங்காளத்தின் சில பகுதிகள்வரைகூடப் பரவியிருந்தது.
இராசராச சோழன் கிழக்கிலிருந்த சாளுக்கிய அரசர்கள் மற்றும் சேர மன்னர்களை வீழ்த்தினான். அத்துடன் பாண்டிய அரசிடமிருந்து இலங்கையின் சில பகுதிகளையும் கைப்பற்றினான். இராசேந்திர சோழன் மேலும் முன்னேறி அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகள், இலட்சத்தீவுகள், சுமத்ரா, ஜாவா, மலேயா மற்றும் பெகு தீவுகளையும் தன் கப்பற்படையைக் கொண்டு கைப்பற்றினான். அத்துடன் தற்போதைய பீகார் மற்றும் வங்காளப் பகுதிகளை ஆண்டு வந்த மகிபாலனையும் வீழ்த்தினான். தன் வெற்றியைக் கொண்டாடும் வகையில் கங்கை கொண்ட சோழபுரம் எனும் தலைநகரை உருவாக்கினான். பதிமூன்றாம் நூற்றாண்டு வாக்கில் சோழர்களின் ஆதிக்கம் குறைந்தது.

14 ஆம் நூற்றாண்டு

14ஆம் நூற்றாண்டில் சோழர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு பாண்டியர்கள் மீண்டும் எழுச்சி பெற்றனர். ஆயினும் அந்த எழுச்சி நீண்ட காலம் நீடிக்கவில்லை. 1316ல் வடக்கிலிருந்து படையெடுத்து வந்த கில்ஜி ஆட்சியாளர்கள், மதுரையை முற்றுகையிட்டு சூறையாடினர். இஸ்லாமியர்களின் படையெடுப்பு சோழர்களையும் பாண்டியர்களையும் பலவீனப்படுத்தி இஸ்லாமிய "பாமினி" ஆட்சிக்கு வித்திட்டது. இஸ்லாமியப் படையெடுப்புக்கு பதிலடி தரும் வண்ணம் பல்வேறு சிற்றரசுகள் சேர்ந்து விஜயநகர பேரரசைத் தோற்றுவித்தன. இப்பேரரசின் பல்வேறு பகுதிகள் பிரிக்கப்பட்டு அவற்றை மேற்பார்வையிட நாயக்கர்கள் என்னும் ஆட்சியாளர்கள் நியமிக்கப் பட்டனர். ஹம்பியை தலை நகராகக் கொண்டிருந்த விஜய நகரப் பேரரசு செல்வச் செழிப்போடும் அமைதியுடனும் திகழ்ந்தது.

ஆனால், 1564 ஆம் ஆண்டு வாக்கில் நடந்த தலிகோட்டா போரில் தக்காணப் பீடபூமியைச் சேர்ந்த சுல்தான்களால் விஜயநகர ஆட்சியாளர்கள் தோற்கடிக்கப்பட்டு, அவர்கள் ஆட்சிக்கடங்கிய பகுதிகள் யாவும் நாயக்கர்களிடையே பிரித்தளிக்கப்பட்டது. நாயக்கர் ஆட்சிக் காலத்திலும் தமிழ்நாடு அமைதியுடனும் செழிப்புடனும் விளங்கியது.தஞ்சை மற்றும் மதுரையைச் சேர்ந்த நாயக்கர்கள் புகழ் பெற்று விளங்கியதோடு பழங்கால கோயில்களை புதுப்பிக்கவும் செய்தனர்.

இன்றைய கேரளாவும் மலபாரை ஒட்டிய பகுதிகளும் சேர நாட்டின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது.கடலை ஒட்டியிருந்த சேரர்களின் ஆட்சிப்பகுதி ரோமானியர்களுடனான வாணிபத்திற்கு ஏதுவாக இருந்தது. ஆங்கிலேய படையெடுப்பு நிகழும் வரை சேரர்களின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்த சிறிய நிலப்பகுதி பெரும்பாலும் வேறெவருடைய படையெடுப்பிற்கும் ஆளாகாமல் இருந்தது.

17 ஆம் நூற்றாண்டு

1639 இல் ஆங்கிலேயர்கள் மதராஸில் (தற்பொழுது சென்னை என்று அழைக்கப்படுகிறது) கிழக்கிந்தியக் கம்பெனியை நிறுவிய பிறகு தமிழ் நாட்டின் அரசியல் வரலாற்றில் புதிய பகுதி தொடங்கியது. தமிழ் நாட்டு சிற்றரசர்களிடையே நிலவி வந்த சச்சரவுகளைப் பயன்படுத்தி அவர்களைப் பிரித்தாண்டு , அவர்களின் மேல் தங்கள் அதிகாரத்தை செலுத்தத் தொடங்கினர். தமிழ்நாடும் அதைத் தொடர்ந்து தென்னிந்தியாவும் மெல்ல மெல்ல ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. ஆங்கிலேயர் அதிகாரத்தை தம் வசப்படுத்திய இந்த காலக்கட்டத்தில் அவர்களை எதிர்த்துப் போராடிய தமிழ் ஆட்சியாளர்களும் கணிசமானோர் இருந்தனர். வீர பாண்டிய கட்டபொம்மன், மருது பாண்டியர், பூலித்தேவன் ஆகியோர் அவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.

20 ஆம் நூற்றாண்டு

1947இல் இந்தியா விடுதலை அடைந்தபோது, மதராஸ் மாகாணம் மதராஸ் மாநிலம் ஆனது. தமிழ்நாடு, கடலோர ஆந்திரப் பகுதிகள், மேற்கு கேரளம், தென் மேற்கு கர்நாடக கடற்கரைப் பகுதிகள் ஆகியவை மதராஸ் மாநிலத்தின் கீழ் வந்தது. 1953இல் மதராஸ் மாநிலத்தின் தெலுங்கு பேசும் மக்கள் உள்ள வட பகுதிகள் ஆந்திர மாநிலமாகவும் தமிழ் பேசும் தென் பகுதிகள் மதராஸ் மாநிலமாகவும் மேலும் பிரிக்கப்பட்டது. 1956இல் மாநில எல்லைகளை மறு வரையறை செய்யும் சட்ட திருத்தத்தின் மூலம் மதராஸ் மாநிலத்தின் மேற்கு கடற்கரை பகுதிகள் கேரளாவிற்கும் கர்னாடகத்திற்கும் இடையே பிரித்தளிக்கப்பட்டது. 1968இல், மதராஸ் மாநிலத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

பாரம்பரியம்

தமிழ்நாடு, இன்றும் செழிப்புடன் விளங்கும், வளமான இலக்கிய, இசை, நடனப் பாரம்பரியங்களுக்குப் பெயர் பெற்றது. இது இந்தியாவின் அதிக அளவு கைத்தொழில் மயமாக்கப்பட்ட மாநிலங்களுள் ஒன்று.

சுப்பிரமணிய பாரதி, வ. உ. சிதம்பரம்பிள்ளை, சி. வி. ராமன், சுப்பிரமணியன் சந்திரசேகர், ஆர். கே. நாராயண், சீனிவாச ராமானுஜன், அப்துல் கலாம், விளையனூர் இராமச்சந்திரன் ஆகியோர் மாநிலத்தின் பிரபலமானவர்களுடள் சிலராவர். இவர்களோடு, கண்ணகி, திருவள்ளுவர், ஒளவையார், கம்பர், இராஜராஜ சோழன் போன்ற முற்காலத்தவரும் இன்றும் நினைவில் இருப்பவர்களாகும். அலன் டூரிங், எனும் கோட்பாட்டுக் கணினியியல் அறிவியலாளரும் இளம் வயதில் மதராஸ் பிரெசிடென்சியில் இருந்தவரே.

அரசியல்

தமிழ் நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள் எண்ணிக்கை 234. நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை 39. 1986 வரை தமிழ் நாட்டில் இரண்டு அடுக்கு சட்ட மன்றங்கள் இருந்தன. தற்பொழுது ஒரு அவை மட்டுமே உள்ளது. மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் ஆகியவற்றுக்கும் ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்பட்டு மக்கள் பிரதிநிகள் தேர்ந்து எடுக்கப் படுகின்றனர்.

தமிழ் நாட்டின் முக்கிய அரசியல் கட்சிகளாக திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவை விளங்குகின்றன.காங்கிரஸ் கட்சி, பாரதிய ஜனதா கட்சி, மார்க்சிய கட்சிகள், பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம் ஆகியவையும் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் வாய்ந்த கட்சிகளாக உள்ளன.

ஈ.வெ.ராமசாமி (தந்தை பெரியார் என்று அறியப்படுகிகிறார்) 1916இல் தோற்றுவித்த திராவிடர் கழகத்தில் இருந்து பிரிந்து வந்து, 1949இல் திராவிட முன்னேற்றக் கழகத்தை (தி.மு.க, D.M.K) சி. என். அண்ணாதுரை தோற்றுவித்தார். 1947இல் இந்திய விடுதலைக்குப் பிறகு 1967 வரை தமிழ் நாட்டை காங்கிரஸ் கட்சி ஆண்டது.1967இல் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி அமைத்தது. 1972இல் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து பிரிந்து, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை (A.D.M.K,அ.தி.மு.க) எம்.ஜி.ராமச்சந்திரன் தோற்றுவித்தார். 1977இல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் முதன் முதலில் ஆட்சியைப் பிடித்தது.

1967 முதல் 2001இல் கடைசியாக நடந்த சட்ட மன்ற தேர்தல் வரை தி.மு.க அல்லது அ.தி.மு.க ஆகிய இரண்டு கட்சிகளில் ஒன்று (அல்லது அக்கட்சிகள் தலைமை வகிக்கும் கூட்டணிகள்) பெரும்பான்மை தொகுதிகளை வென்று வருகின்றன.லதமிழ் நாட்டு சட்டமன்றத் தேர்தல்களில் பல கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுவது உண்டு என்றாலும், இது வரை தனிக் கட்சி ஆட்சியே நடை பெறுகிறது. இருப்பினும், தமிழக கட்சிகள் நடுவண் அரசில் கூட்டணி ஆட்சி அமைக்க உதவவும் பங்கேற்கவும் செய்கின்றன.

தமிழ் மொழி வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு,தாழ்த்தப்பட்டோர் மற்றூம் சிறுபான்மை சமூகத்தின் நலன், இட ஒதுக்கீடு, காவிரி நதி நீர்ப் பங்கீடு பிரச்சினை, விவாசாயிகள், பாமரர் மற்றும் நலிவடைந்த பிரிவினர் நலன், ஊழல் ஆகியவை தமிழ் நாட்டு அரசியலில் முக்கியத்துவம் உள்ளவை.