Search This Blog

Friday, August 10, 2007

கவிதைக் கிறுக்கல்

ம(றை)றந்த நிஜங்கள்

முகவை ப.குமார்


புதிய மண்பானையில்
மாக்கோலமிட்டு
வீட்டின் முற்றத்தில்
புதிய அரிசிகொண்டு
பொங்கலிட்ட -அந்நாள்...

உப்புக்கரிக்கும்
உடல் வியர்வைகள்பட்டு
விளைந்த நெல்கொண்டு செய்த
பொங்கல் இனிப்பாக இருந்தது
சர்க்கரையினால் அல்ல...

கட்டாந்தரையில்
படுத்திருந்த எருதின்
கயிற்றைப்பிடித்து
தலைக்கு மேலிருக்கும்
தண்ணீர் நிறைந்த
ஆழத்தில் ஆற்றுக்கு
ஓட்டிச் சென்று
நீச்சல் கற்ற -அந்நாள்...

எருதுக் கொம்புகளை
ஊசி முனைகளாக்கி
கழுத்தில் பணத்தையும்
கொம்பில் துண்டையும் கட்டிவிட்டு
மீசையிருந்தா புடிங்கடா என
முழக்கமிட்ட -அந்நாள்...

தாத்தா பாட்டியையும்
தனக்கு முதியோரையும்
வணங்கிவிட்டு வரும்போது
அவர்கள் கொடுக்கும்
கால்ரூபாய் அரைரூபாய்
இவற்றை
நான் மறந்து விட்டேனா?
மறைத்து விட்டேனா?...

பண்பாட்டின் வளர்விடம்
போற்றிப் பாட
நாகரீகத்தின் வளர்விடம்
மறைத்தும் மறந்தும் விடுகின்றன
கூடவே நானும்.



(திண்ணை இணையதளத்தில் 2004 சனவரி 24-ல் வெளிவந்த என் கவிதைக் கிறுக்கல்)

1 comment:

நளாயினி said...

பழைய நினைவுகள் பலதை கட்டி இழுத்து வந்திருக்கிறீர்கள்.