கற்பனைக் கூடத்தில்
களவாடப்பட்ட – என்
எண்ணங்களுக்கு
வண்ணங்களடித்து
வாழ்த்துப் பாடல் பாடியது போதும்...
முதிர்ந்த தலைமுறை கொண்ட
முத்தமிழை – முதல்
தலைமுறையாம்
அறிவியல் தமிழில்
அறியணை ஏற்றுவோம்...
சாதியின் வீணையில்
சங்கீதம் கற்காமல் – முன்பே
உயிர்விட்ட முண்டாசுக் கவிஞனின்
வரிகளுக்கு உயிர் கொடுப்போம்...
கனவுகள் காண்போம்
கலாம் உடைய கனவுகளுக்குள் புகுந்து
கந்தக பூமியில்
கல்விச்சாலைகள் மட்டும் இருப்பதாக...
பத்துப் பைசா
புழக்கத்தில் இல்லை – ஆனால்
செல்லிடப்பேசியில் மட்டும் செல்லுகிறது
பத்துப் பைசா பசியை ஆற்றிட
பசுமைப் புரட்சி செய்திடுவோம்...
கல்லூரிக் காண்போம்
கட்டடங்களாக இல்லாமல்
விவசாயிகளைக் கொண்ட
விளை நிலங்களாக...
வண்ணத்துப்பூச்சியின்
வண்ணங்கள் மாறுவதை நிறுத்துவோம்
புகை இல்லாத பூமியைக் கொண்டு...
போராடத் தெரிந்த உனக்கு
ஊனம் ஒரு ஊன்றுகோல்
வானம் ஒரு எல்லைக்கோடு...
வரலாறு படைத்திட – நாம்
வரலாறு படைத்திட
வரலாறாகவே மாறுவோம் – நாம்
வரலாறாகவே மாறுவோம்.
- ப. குமார்